ஸ்தல வரலாறு

ஸ்தல வரலாறு

சிதம்பர விநாயகர்
திருக்கோவில் தோற்றம்

பாண்டி நாட்டில் காரைக்குடி நகரின் மேற்கு எல்லையாக உள்ள கோவிலூர் என்னும் இச்சிற்றூர் தொன்மையான புகழ் பெற்றது. காரைக்குடி - குன்றக்குடி சாலைக்கு இடையே ஓடும் தேனாற்றைத் தென் எல்லையாக கொண்டது இவ்வூர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கோவிலூர் நகரத்தார் பீடம் அமைந்துள்ள புராதனமான ஸ்தலத்தில், 168 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த எங்கள் முன்னோர்கள், காரைக்குடி பிள்ளையார்பட்டி கோவிலைச்சேர்ந்த அ. முத்து.அ / அ.முரு./ சோம.மு பொதுக்குடும்பத்தார்கள், திருப்பணி செய்து அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு சிதம்பரவிநாயகர், "தெற்கு ஊரணிப் பிள்ளையார்" என்றும் "மாப்பிள்ளை விநாயகர்" என்றும் வழங்கப்படுகிறது.

அருள்மிகு சிதம்பர விநாயகர் ஆலயமும் 1854-ம் ஆண்டு கோவிலூர் 3வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி (எ) சிதம்பர சுவாமிகள் அருளாணைப்படி, அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆலயம், நந்தவனம், தண்ணீர்ப்பந்தல், விடுதி, ஊரணி ஆகியவற்றிற்கும் சிவகங்கை சமஸ்தானத்தில் இருந்து இடம் வாங்கப்பட்டு எங்கள் பொதுக் குடும்பத்தாரால் 150 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகம் செய்து வரப்படுகிறது.

சுவேதன் என்னும் மன்னன் அன்னதானம் செய்யாப் பாவம் நீங்கக் கோவிலூரில் குடியேறிக் காடுவெட்டிக் கழனியாக்கினான், எனவே இவ்வூருக்கு கழனி நகர் என்று ஒரு பெயர் உள்ளதாகவும், மன்னன் வெட்டி கழனியாக்கிய காட்டின் பெயர் சமிவனம் என்றும் தெரிகிறது. இக்காட்டின் ஊடே சுயம்புலிங்கம் ஒன்று இருந்தது. 12ஆம் நூற்றாண்டு வரை கூரை கொட்டகையிலும் பின்பு செம்பூரான் கற்களாலானதுமான கோவிலில் சிவனும் அம்பிகையும் அருள்பாலித்தனர் என்றும் சொல்வர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காரைக்குடியில் சிவன் கோவில் இல்லாத காரணத்தால் (1818 - 1847) காரைக்குடியிலிருந்து தினசரி கோவிலூர் வந்து வழிபட்ட முத்துராமலிங்கம் என்ற பெரியவர், பின்னர் கோவிலூர் ஆண்டவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஞானியர், அந்தக்கோவிலை கருங்கல் திருப்பணி ஆக்கினார்கள். கோவிலுக்கு முன்னால் திருக்குளமும் கோவிலைச் சுற்றி சத்திரங்கள், வீடுகள் ஆகியவற்றையும் உண்டாக்கினார்கள். இவ்வாறாக கோவிலை ஒட்டி உருவான ஊர் என்பதால் மக்களால் கோவிலூர் எனப்பெயர் பெறுவதாயிற்று. மறைஓதல், ஆராதனை செய்தல், வாத்தியங்கள் முழங்கல், பாராயணம் செய்தல் ஆகியவற்றிற்கும் முறை வகுத்தார்கள். முத்துராமலிங்க ஞானதேசிகர் அவர்களுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த துறவு சுவாமிகளாகிய சிதம்பரஅய்யா என்ற கருணாநிதி சுவாமிகள், இராமசாமி ஞானதேசிகர், வீரப்பஞான தேசிக சுவாமிகள்... என்று அதற்கு பின் பட்டத்திற்கு வந்த அனைவரின் அருளாலும் முயற்சியாலும் கண்டவர் வியக்கும்படி கோவிலூர் இன்று பொலிவு பெற்று திகழ்கிறது. வீரப்ப சுவாமிகள் காலத்தில் ஆடிப்புர திருவிழாவையும் ஏற்பாடு செய்தார்கள். அந்நாட்களில் இத்திருவிழாவில் கலந்துகொண்டு ஈசன் அருள் பெற காரைக்குடியே திரண்டு செல்லுமாம்.

நீறு மணக்கும் நெற்றியெலாம்
நெய்யே மணக்கும் கறி எலாம்
சோறு மணக்கும் மடங்கள் எலாம்


என்பார்கள். அதன்படி பல ஆண்டுகளாக அருள்மிகு திருநெல்லை அம்மன் உடனுறை கொற்றவாளீஸ்வரர் தபசு மண்டகப்படியும் நடைபெற்று வருகிறது. அன்று அம்பாள் ஈசனுடன் கோபித்துக்கொண்டு வந்து சிதம்பர விநாயகர் ஆலயத்தில் அமர்ந்துவிடுவாள். பிள்ளையார் பட்டி கோவிலைச் சேர்ந்த அ.முத்து.அ/அ.முரு./சோம். மு பொதுக்குடும்பத்தார்களாகிய நாங்கள் அன்று முழுதும் அம்பாளை அபிஷேக ஆராதனைகளால் குளிர்வித்து அவளது பரிபூரண அருள் பெறுவோம். இரவு கொற்ற வாளீஸ்வரர் எழுதருளல் செய்து ஊரார்களுடன் வந்து அழைத்து செல்வார். நாங்கள் இந்த மண்டகப்படி செய்யக்கிடைத்ததைப் பெரும்பாக்கியமாக கருதிச் செய்து வருகிறோம்.

தைப்பூசத்திற்கு பழனி முருகனுக்கு காவடி எடுத்து செல்லும் நமது காரைக்குடி நகரத்தார்கள், பாதயாத்திரையாக பழனி சென்று காவடி செலுத்தி திரும்பி வரும் பொழுது குன்றக்குடியில் பூஜை முடித்து, சிதம்பர விநாயகர் ஆலயத்தில் காவடிகளை கொண்டுவந்து வைத்து, பூர்த்தியாக தீபாராதனை செய்து சிதம்பர விநாயகரை வழிபட்டு இல்லம் திரும்புவார்கள். சுற்று வட்டார மக்கள் அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக, நம்பிக்கையுடன் வழிபட்டோருக்கு அனுக்கிரகம் செய்யும் தெய்வமாக சிதம்பர விநாயகப்பெருமான் விளங்கி வருகிறார். கோவிலூர் மக்களும் தாம் எண்ணிய கருமம் நிறைவேறியவுடன், அதன் நன்றிக் கடனாக நேர்த்திகளை நிறைவேற்றி வருகின்றனர்.

கோவிலூர் நகரத்தார் பீடத்தை அலங்கரித்த ஸ்ரீலஸ்ரீ நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் அரும்பணியாற்றி கோவிலூர் சிறப்பான ஸ்தலமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ததோடு எங்களுடைய திருக்கோவிலையும் நந்தவனத்தையும் சீர்செய்து மேம்படுத்த எங்களுக்கு உத்வேகம் அளித்து அருளாசி வழங்கினார்கள். அதுபோல தற்பொழுது பீடாதிபதியாக கோவிலூரில் அரும்பணி ஆற்றி வரும் ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகளும் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள். மேலும் எங்கள் திருக்கோவில் பொலிவுபெற்று விளங்க தேவையான வழிமுறைகளையும் அவ்வப்போது மானாமதுரை அருள்மிகு மஹா பஞ்சமுக பிரிதியங்கரா தேவி ஆலயத்தின் ஸ்ரீலஸ்ரீ ஞானசேகர சுவாமிகள் அவர்களும்-மாதாஜி அவர்களும் ஆசி வழங்கி இந்த திருப்பணியில் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வழிநடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்பாடுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புகள். தமிழகம் மலை மறைவு பிரதேசத்தில் உள்ளது. தமிழகத்தின், புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான பாறைகளை கொண்டதாகும். எனவே நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம் என்று தெரிந்துகொண்ட நம் முன்னோர்கள் "கோவில் இல்லா ஊருமில்லை, ஊரணி இல்லாக் கோவிலுமில்லை" என்று ஊரணி அமைத்து கொடுத்திருக்கிறார்கள். அதன் படி எங்கள் பாட்டனார்களும் ஒரு ஏக்கர் பரப்பளவில் குடிநீர் ஊரணியாக சிதம்பரவிநாயகர் கோவில் ஊரணியை கட்டியிருக்கிறார்கள். அது இன்றளவும் ஊருக்கு உதவும் வகையில் இருக்கிறது. பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த ஆலயத்திற்கு எங்கள் முன்னோர்கள் வழி வந்த நாங்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் எங்கள் குலதெய்வம் மதுக்கார நாச்சியம்மன் அருளாலும், காஞ்சி மஹா பெரியவா ஆசியுடனும் திருப்பணி செய்து சீரமைக்கப் பெற்று வருகிற சுபகிருது வருடம் வைகாசி மாதம் 26ந் தேதி குரு வாரத்தில் (வியாழக்கிழமை) 09.06.2022 திருக்குட நன்னீராட்டு, நான்கு கால யாகசாலை வேத பாராயணம் திருமுறைப் பாராயணத்துடன் நடைபெற உள்ளது. இத்தெய்வீகமான புனித கைங்கரியத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றி வைப்போம்.

சுவேத மன்னன் அன்னதானம் செய்யாப்பாவம் நீங்க உண்டாக்கிய ஊரில் நிகழவிருக்கும் திருக்குட நன்னீராட்டு விழாவையொட்டி 7.6.2022 இரவு ஆரம்பித்து தொடர்ந்து 9.6.2022 மதியம் வரை தினசரி அன்னதர்மமும் செய்ய சிதம்பர விநாயகர் அருள்கூட்டியிருக்கிறார். எந்தெந்த ஊருக்கோ நாட்டுக்கோ செல்கிறோம். எதுஎதெற்கோ நேரமும் பணமும் செலவு செய்கிறோம், நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் பீடம் அமைந்துள்ள கோவிலூருக்கும் நமது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் வந்து சிதம்பர விநாயகர், திருநெல்லை யம்பாள் உடனுறை கொற்றவாளீஸ்வரரையும் வணங்கி அருள் பெறுவோம். அத்துடன் ஊருக்காக, சமுதாயதிற்காக பாடுபட்டு உழைத்து ஊர்களுடன் ஒத்து வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் நமது நகரத்தார் பெருமக்களின் தொண்டும், கலாச்சாரமும் நம் குழந்தைகளுக்கு விளங்கச் செய்வோமாக!